Correspondent
பெண்ணின் முக்கியத்துவம் இயற்கைக்கு இன்றியமையாதது. ஒரு சமூகம் முழுமைபெற்ற வடிவம்பெற பெண்ணின் சிருஷ்டியே முக்கியத்துவம் ஆகிறது. இச்சிறப்புமிக்க பெண்களின் படைப்பில் அதிசயமும் அவசியமும் நிகழ்ந்தாலும் பெண்சமூகம் தன்வளர்ச்சியில் தடைகளையும் இன்னல்தரும் இடையுறுகளையும் தாண்டித்தான் வரவும் வளரவும் வேண்டியுள்ளது.
இறைவன் படைப்பில் இமயத்தைத் தாண்டிய அறிவாற்றலும் ஆளுமைப்பண்பும் பெண்ணியத்துக்குள் சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றன. அணையாமல் ஒளிரவிடுவது நம் ஒவ்வொருவரின் வழிநடத்தலிலும் வழிகாட்டுதலிலும் இருக்கிறது. அழியாத கல்வியைப் பெண்குழந்தைகளுக்கு அளித்தால் அவர்கள் ஆளுமையால் அகிலத்தையே புதுப்பிப்பார்கள். சுயநலம் விரட்டி பொதுநலம் விதைப்பார்கள். சூட்சுமமிக்க சமூகத்தை விருட்சமாக்குபவர்கள். "ஒரு பெண் கல்வி கற்றால் இந்தச் சமுதாயமே வளம்பெறும"; என்ற சுவாமிஜியின் வார்த்தைகளுக்கு உயிர்கொடுக்கும் போது நம் சமுதாயமும் உயர்வுபெறும். செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என்ற பாரதியின் நம்பிக்கை வலிமைபெறும். இதற்குக் கல்விக்கூடங்களை நிறுவி அறிவொளி சுடரச்செய்யும் நம் உள்ளத்துள் ஆனந்தமும் அமைதியும் குடிகொள்ளும். அப்போது வாழ்க்கையின் அர்த்தமும் வாழ்ந்ததற்கான அடையாளமும் பதிப்பிக்கப்படும் இவ்வுலகம் என்னும் (ஏட்டில்). ஏட்டுக் கல்வி கொடுக்கப்படும்போது அறிவுவளரும். ஆன்மீகக் கருத்துகளை வலியுறுத்தும்போது பெண்குழந்தைகளுக்கு அனுபவ அறிவு மிளிரும். அன்பு அருள் அரவணைப்பு சகிப்புத்தன்மை இவற்றைக் கொடுக்கும் போது வாழ்வியல் சுழற்சி சுலபமாகும். பெண்குழந்தைகள் தங்களைப் பாதுகாக்கவும் சமுதாயத்தைத் தாங்கிக்கொள்ளவும் அறிவுதரும் கல்வியும் அனுபவம் தரும் ஆன்மீகமும் அவர்களுக்;குக் கொடுப்பதே கொடைகளில் சிறந்தகொடை என்பதை நடப்பியல் நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.