தமிழ்த்துறை

“அறம் இல்லாத அறிவியலும்
தரம் இல்லாத தங்கமும் சமம்”

இதனால்தான், ‘அறம் செய்ய விரும்பு’ எனக் கற்பிக்கும் துறையொன்று தேவைப் படுகிறது. கணவாய்ப்புதூர், ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி இத்தேவையை 2010-ஆம் ஆண்டு தமிழ்த்துறையைத் தொடக்கி வைத்து நிறைவு செய்தது. அன்றுமுதல், இளங்கலைத் தமிழ் (BA Thamizh) உளங்களைக் கவர்ந்து வலம்வரத் தொடங்கியது. இதுவரை வெற்றிகரமாக மூன்று பட்டமளிப்பு விழா மேடை கண்ட பெருமிதம் இத்துறைக்கு உண்டு. பெருகிவரும் ஆதரவினால் படிப்படியாக மாணவியர் எண்ணிக்கை தமிழ்த் துறையில் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் 2015-ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் (MA Thamizh) பாடப்பிரிவும் தொடங்கப்பட்டு மாணவியர் சேர்க்கையும் நடை பெற்றது. உயர்கல்வியை எட்டிவிட்ட தமிழ்த்துறை அடுத்ததாக ஆய்வுத்துறையிலும் கால் பதிந்துவிட்டது. ஆம்! ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) [பகுதி நேரம்] பட்டப்படிப்பும் இணைந்து கொண்டது. இனியென்ன? பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிவுயர் பட்டத்தையும் எம்துறை விட்டு வைக்கவில்லை. ஆம்! முனைவர் பட்டம் (Ph.D.) [பகுதி நேரம்] மேற்கொள்ளவும் தமிழ்த்துறை இடமளிக்கிறது. இளங்கலைத் தமிழ், முதுகலைத் தமிழ், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் என ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முழுமைத் துறையாக விளங்கும் ஒரே துறை ‘தமிழ்த்துறை’ மட்டுமே!